செப்டம்பர் 5 ந் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 35 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழக்கும் விழா புதுக்கோட்டையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விருதுகளை வழங்கி கௌரவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அறந்தாங்கி திராவிடச் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நல்லாசிரியருக்கான சான்றிதழ், பதக்கம், மற்றும் ரூ.10001 பணம் வழங்கப்பட்டது.
இதில் நக்கீரனால் முதன்முதலில் வெளிக்கொண்டுவரப்பட்ட கவரப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியை மீனாவும் விருது வாங்கினார். இந்நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள ஆவணத்தாங்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ப.கலைச்செல்வியும் விருது பெற்ற கையோடு தனது பள்ளிக்கு வந்து தமிழக நல்லாசிரியருக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வைத்துக் கொண்டு அரசு வழங்கிய பரிசுத் தொகை ரூ.10001 ஐ பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக சக ஆசிரியர் பாஸ்கரனிடம் வழங்கினார்.
நல்லாசிரியருக்கான பரிசுத் தொகையை அப்படியே பள்ளி வளர்ச்சிக்காக வழங்கிய தலைமை ஆசிரியையான நல்லாசிரியர் கலைச்செல்வியைக் கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். நல்லாசிரியர் விருது நல்ல ஆசிரியர்களுக்குக் கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது.