திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுகவுக்கு ஈரோடு பாராளுமன்றத் தொகுதி கொடுக்கப்பட்டது. வேட்பாளராக கணேசமூர்த்தி களமிறக்கப்பட்டார். உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றார். பலதேர்தல்களுக்கு பிறகு மதிமுகவுக்கு ஒரு எம்.பி கிடைத்திருப்பதால் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இன்று கணேசமூர்த்தி எம்பியாக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நாளை கொண்டாடும் விதமாகவும் கணேசமூரத்தி எம்பிக்கு வாழ்த்துச் சொல்லும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றிய மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கொன்றைக்காடு முத்தையன் தனது தேநீர் கடைக்கும் வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இன்று ஒரு நாள் முழுவதும் ஒரு டீ ஒரு ரூபாய்க்கும், வடை போன்ற பலகாரங்கள் ஒரு ரூபாய்க்கும் வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி காலை தொடங்கும் போது மதிமுக நிர்வாகிகள் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பல பலரும் நேரில் சென்று முத்தையனை பாராட்டினார்கள்.
இதுகுறித்து முத்தையன் கூறும் போது.. தலைவர் வைகோவின் பேச்சைக் கேட்டு அந்த இயக்கத்தில் இருக்கிறேன். பதவிக்காக ஆசைப்பட்டவர்கள் கட்சி மாறலாம் ஆனால் நான் தலைவருக்காக கட்சியில் சேர்ந்தவன் அதனால் எப்போதும் மதிமுகதான். பல வருடங்களுக்கு பிறகு மதிமுக உறுப்பினர் பாராளுமன்றத்தில் கால் வைக்கிறார் என்பது பெருமையாக உள்ளது. அந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட நினைத்தேன். பட்டாசு வாங்கி வெடித்து காசை கரியாக்கி சுற்றுச்சூலை மாசுபடுத்த விருப்பமில்லை.வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் திருவள்ளூவர் தினத்தினத்தில் பேராவூரணியில் அய்யா தங்கவேலனார் ஒரு ரூபாய்க்கு டீ, காபி கொடுப்பது நினைவுக்கு வந்தது. நாமும் அதையே செய்யலாமே என்றுதான் இன்று எங்கள் எம்பி பதவி ஏற்கும் நாளில் காலை முதல் மாலை வரை தேனீர், பலகாரம் ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறேன் என்றார். இதேபோல மதிமுகவில் பாசமுள்ள தொண்டர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.