தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கிராமம் மற்றும் நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீரானது சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையில் சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 31 சென்டிமீட்டர் மழையும், செம்பனார்கோவில் பகுதியில் 24 சென்டிமீட்டர் மழையும், பொறையாறு பகுதியில் 18 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறையில் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி காணப்படுகிறது.