திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், நேற்று முன்தினம் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை, மீட்பு பணிகளின் போதே மேலும் உள்நோக்கி சென்று தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது. சுமார் 2 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் சுர்ஜித் குறித்து பேசினார். அப்போது, "நேற்று இரவு சோதனை செய்தபோது குழந்தையின் உடலில் வெப்பம் நிலவுவதை ரோபோ கேமரா காட்டியுள்ளது. குழந்தையின் கை தெரியும் நிலையில் கேமராவில் அசைவின்றி காணப்படுகிறது. குழந்தையை மீட்க மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அரசின் அனைத்து துறையினரும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 20 அடிக்கு மேல் துளையிடப்பட்ட நிலையில், 40 அடி வரை பாறை உள்ளதால் மீட்பு பணி சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் கூடிய விரைவில் குழந்தை நல்லபடியாக மீட்கப்படும்" என தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள இயந்திரத்தை விட 3 மடங்கு வேகம் கொண்ட மற்றொரு இயந்திரம் வந்துக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.