விஜயின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் பிரச்சனையோடே வெளிவரும் சூழ்நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகும் 'மாஸ்டர்' படத்தையும் அந்தப் பரபரப்பு விட்டுவைக்கவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர் படக்குழுவினர்.
ஏற்கனவே, படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கதை என்னுடைய கதை என்று கே.ரங்கதாஸ் என்பவர் குற்றம் சாட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
‘நினைக்கும் இடத்தில் நான்’ என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள கதைதான் ‘மாஸ்டர்’ எனும் தலைப்பில் எடுத்துள்ளனர். இக்கதையைத் தென் இந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 2017 ஏப்ரல் 7ஆம் தேதி பதிவு செய்து அதற்கான நகலையும் வைத்துள்ளார். இந்தக் கதை நீட் தேர்வையும், 11ஆம் வகுப்பு தேர்வையும் மையமாகக் கொண்டுள்ளது.
இதில் ஹீரோவுக்கு மகிபாலன், வில்லனுக்கு மகேந்திரன் எனவும் பெயர் சூட்டியுள்ளார். இருவரும் ஒரே கல்லூரில் படித்த நண்பர்கள், இருவரும் எம்.ஏ. படித்துமுடித்து பேராசிரியர் தகுதிக்கான ‘ஸ்லெட்’ தேர்வு எழுதி, அதில் ஹீரோ தேர்ச்சி பெறவே, வில்லன் அதில் தோல்வி அடைகிறார்.
வில்லனுக்கு என்று தனியாக ஒரு சொந்தக் கல்லூரி உள்ளது. அதில், பேராசிரியாரக ஹீரோ பணிபுரிந்துவரும் நிலையில், சில பிரச்சனை காரணமாக வில்லன், ஹீரோவை விரட்டிவிடவே, ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாத்தியாராகப் பயணித்து தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கிச் செயல்படுவதே இக்கதையாக உள்ளது.
இதில் ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘கண்ணபார்த்தாக்கா’ என இரண்டு பாடலும் கதையின் சுட்சிவேஷனை எடுத்துக்காட்டுகிறது. இவை இரண்டும் ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமானது. இதை அனைத்தையும் அப்படியே அவர்கள் வைத்துள்ளனர் என்று கே.ரங்கதாஸ் குற்றம் சாட்டுகிறார்.
“இது சம்பந்தமாக நான் வழக்குத் தொடுக்கவேண்டும். ஆனால், தென் இந்தியத் திரை சங்கத்திலிருந்து இக்கதை, இங்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லது இல்லை என்று லெட்டர் கொடுத்தால்தான், நான் மேலும் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஆனால், அதை கொடுக்கவே மறுக்கிறார்கள். கதையைச் சங்கத்தில் பதிவு செய்தவுடனே, அந்தக் கதையை இவர்களே வேறு யாருக்காவது பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்துவிடுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தென் இந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் மனோஜ்குமாரிடம் கேட்டபோது, “இது தொடர்பாக எந்தத் தகவலும் எனக்குத் தெரியவில்லை. நான் சூட்டிங்கில் இருப்பதால் அதனை விசாரித்துத் தகவல் கொடுக்கிறேன்” என்றார்.
கதை திருட்டில் 'கத்தி'யைத் தொடர்ந்து 'மாஸ்டர்' படமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.