Skip to main content

ஆசை மகனைப் பலிகொண்ட திறந்தவெளி கால்வாய்... சோகத்தில் உறைந்த திருச்சி தென்னூர்! 

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

sad incident in thiruchy thennur

 

திருச்சியில், 5 வயது சிறுவன் திறந்த கழிவுநீர்க் கால்வாயில் விழுந்து, ஒருநாளுக்குப் பின் (இறந்த நிலையில்) மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம், தென்னூரில் உள்ள அன்னை சத்யா நகரில் வசித்து வரும் நளினி-பிரேம்குமார் தம்பதியினரின் 5 வயது மகன், யஷ்வந்த். நேற்று மாலை, வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்ற யஷ்வந்த், காணாமல் போனநிலையில், அவரை அவரது பெற்றோர்களும், உறவினர்களும் விடிய விடியத் தேடியுள்ளனர். இந்நிலையில் அடுத்த நாள் காலை, அருகே உள்ள 5 அடி ஆழம் கொண்ட திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் யஷ்வந்த் சடலமாக மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததோடு, காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

 

sad incident in thiruchy thennur

 

சம்பவ இடத்திற்கு வந்த தில்லைநகர் போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பகுதியில் கழிவுநீர்க் கால்வாயில் குழந்தைகள் தவறி விழுவது இது முதன்முறையல்ல, இதற்கு முன்னே பலமுறை சிறுவர்கள், குழந்தைகள் அந்த திறந்தவெளி கழிவுநீர்க் கால்வாயில் விழுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

 

ஆனால், எப்படியும் காப்பாற்றிவிடுவோம். இதுவரை உயிரிழப்பு வரை செல்லவில்லை. தற்பொழுது ஒரு உயிரைப் பலிகொண்டுள்ளது, அந்தச் சாக்கடைக் கால்வாய். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தொடர்ந்து சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறுவன் யஷ்வந்த் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் பிடித்த, மிகவும் துருதுவென இருக்கும் சிறுவன் எனவும், அவன் இறந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனக் கண்ணீருடன் அப்பகுதிமக்கள் தெரிவித்தனர். சிறுவனின் உயிரிழப்பு, திருச்சி தென்னூரைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்