'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை பதவிக்காக மாறி மாறி மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும், இரு தரப்பு ஆதரவாளர்களும் செய்தியாளர்களைச் சந்தித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நீக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில், 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை, சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.