பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், 'இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலுவிழக்கக் கூடும். இதன் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும்' என தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட மின்விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7 மெயின் ரோட்டில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த லட்சுமி, அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புயலின் போது குடிசை வீட்டிலிருந்த இவர்கள் பாதுகாப்பிற்காக மற்றொரு வீட்டு வாகனம் நிறுத்தும் இடத்திற்கு தஞ்சம் புகுந்து சென்ற நிலையில், தூங்குவதற்கு பாய் எடுத்து வரும்போது அறுந்து கிடந்த மின் கம்பியின் மீது இரண்டு பேரும் கால் வைத்ததால் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை முடித்துவிட்டு வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் திரும்பும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.