மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல இடங்களில் இதற்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(22-07-23) சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்ற வளாக வாசலில் மணிப்பூர் பற்றி எரிவதைக் கண்டித்தும் மேலும் பெண்கள் அங்கு கொடுமைக்கு உள்ளாவதைக் கண்டித்தும், இதை ஒடுக்க இயலாத ஒன்றிய அரசைக் கலைத்து ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர வேண்டும் என்ற கோஷங்களுடன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் வழக்குரைஞர்கள் ஏ. ராஜேந்திரன், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், கிருபாகரன், மோகன்லால், நோபல் சந்திரபோஸ், அஸ்வின் குமார், அசோக், விக்னேஷ், ஆறுமுகம், ரவி, சிவகாமி, சுப்பிரமணி, அப்துல் கலாம், நிவேதா கௌசி, நீலாம்பரி, அமிர்தா, ஜெயபிரகாஷ், அப்துல் சலாம், கோகுல் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், ஜி.முரளி, மைதீன், பிரியங்கா படேல், சண்முகம் படேல், கண்ணன், முகமது ரஃபி, சுப்பிரமணி, ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.