Skip to main content

“மருதநாயகத்துக்கு மணிமண்டபம்.! கவிக்கோ பெயரில் இருக்கை.!” - தமிமுன் அன்சாரி  வேண்டுகோள்

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

“Manimandapam for Marudanayakm! Seat in the name of Kaviko! ” - Tamimun Ansari

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ம.ஜ.க.வின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார். அந்நிகழ்ச்சிகளில் ஒன்றாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயற்குழுவில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி, அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. சமீப காலமாகத் தமிழகச் சட்டசபையில் நாகரீகமான முறையில் விவாதங்கள் நடைபெறுகிறன. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம். சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கவுரவித்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. மக்கள் கவனத்திற்கு வராத விடுதலை தியாகிகளையும் அரசு சிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட மருதநாயகத்தைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு மதுரையில் நூலக வசதியோடு மணிமண்டபம் கட்ட வேண்டும்.

 

தமிழுக்கும், தமிழகத்திற்கும் சிறப்பு சேர்த்த பிரபலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு, அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அவரின் பெயரால் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான இருக்கை ஒன்றைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

 

சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் பயன்பாடற்ற முறையில் இருக்கிறது. அதை மக்கள் தொடர்போடு இருக்கும் வகையில் அதில் நூலகம் ஒன்றையும், விழா மண்டபம் ஒன்றையும் அமைக்க வேண்டும்.

 

இதில் கடைசி இரண்டு கோரிக்கைகளும் கடந்த ஆட்சியில் சட்டமன்றத்திலேயே வலியுறுத்தியிருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் அவர், சில உள்ளூர் கோரிக்கைகள் குறித்தும் பத்திரிகையாளர்களிடம் பேசினார். 

 

அதுமட்டுமின்றி, 2016 ஆம் ஆண்டு ஆம்பூர் கலவர வழக்குகளை மனிதாபிமான அடிப்படையில் அரசு திரும்பப் பெற வேண்டும். ஆம்பூரில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரெட்டி தோப்பு மேம்பாலப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ஆம்பூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினார். 

 

பிறகு ஆம்பூரில் மரணமடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மஜக பிரமுக கபீரின் தந்தை மறைவையொட்டி அவரது வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநில துணைச்செயலாளர் அப்சர் சையத், மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்