அண்மையில் திரைக்கு வந்து நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள படம் 'மாநாடு'. டைம் லூப் கான்செப்டில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சிம்புவின் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் மட்டுமல்லாது வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரமும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தியேட்டருக்கு வரும் இளைஞர்களிடம் எங்கள் கட்சியில் சேர்ந்தால், எங்களுக்கு வாக்களித்தால் மாநாடு படத்தின் டிக்கெட் இலவசம் என கோவை இளைஞர் காங்கிரஸார் சிலர் தியேட்டர் வாசலில் நின்று படம்பார்க்க வரும் இளைஞர்களிடம் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை சுந்தராபுரம் அரசன் தியேட்டரில் மாநாடு படம் பார்க்கச் செல்லும் இளைஞர்களை குறிவைக்கும் சிலர் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டையை எடுத்துவந்து காங்கிரசுக்கு வாக்களித்தால் மாநாடு படத்தின் டிக்கெட் இலவசம் எனக்கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான வீடியோவில், ''தம்பி எத்தனை பேர் இருக்கீங்க'' எனக்கேட்க, ''நாங்க நாலு பேர் இருக்கோம்'' என இளைஞர்கள் சொல்ல, ''சரி வரும்பொழுது ஆதாரும், ஓட்டர் ஐடியும் கொண்டுவாங்க காங்கிரசுக்கு சப்போர்ட் ஒரு ஓட்டு அவ்வளவுதான். நாங்க இங்கையே இருக்கோம்'' என்கிறார். மேலும் ''வேறு நண்பர்கள் இருந்தாலும் அவங்களிடமும் சொல்லுங்க'' எனக் கூறுகின்றனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, அகில இந்திய அளவில் இளைஞர் காங்கிரசுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான ஆன்லைன் தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 7 தேதியோடு அந்த ஆன்லைன் தேர்தலுக்கான கடைசி நாள் என்பதால் இளைஞர்களைக் கூட்டமாக பிடித்து தேர்தலில் வாக்களிக்க வைக்க முடியாது என்ற நிலையில் இளைஞர்கள் கூடும் தியேட்டரை குறிவைத்துள்ளனர் கோவை இளைஞர் காங்கிரசில் சிலர்.