சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக, வரும் 11- ஆம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை விமான நிலையத்தில் வருகிறார்.அதன் பிறகு கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கும் அதிபர், அன்றைய தினம் மாலையே கார் அல்லது ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் இந்தியா- சீனா இடையேயான நல்லுறவு குறித்தும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்கின்றனர்.
இந்நிலையில் சீன அதிபரின் வருகையை அடுத்து சென்னை மற்றும் இசிஆர் சாலை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி இல்லை.
பிரதமர் மற்றும் அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று மீண்டும் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருடன் அதிகாரிகள் தீவிர ஆலோசனை செய்து வருகின்றன.