Skip to main content

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு; 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Water release from vaikai Dam Flood warning for the people of 4 districts

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதே சமயம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 10 ஆம் தேதி அணை நிரம்பியது. மேலும் வைகை அணையின் நீர்மட்டம் 64.70 அடியிலிருந்து 64.86 அடியாக உயர்ந்துள்ளது.

 

இந்நிலையில், அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்தின் வைகை பூர்வீக 2 ஆம் பகுதி பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வீதம் 5 நாட்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,531 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்