
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றான கோவை மருதமலை முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த வாரம் கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிந்த நிலையில் விழாவையொட்டி கடந்த ஒரு வாரமாகவே கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோவில் அடிவாரப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் சுமார் இரண்டரை அடி உயரத்தில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளி வேல் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 03/04/2025 அன்று திடீரென அந்த வேல் காணாமல் போன நிலையில் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகார் அடிப்படையில் தியான மண்டபத்தின் உள்ளே இந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது சாமியார் வேடமிட்ட நபர் ஒருவர் வெள்ளி வேலை திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து வெள்ளி வேலை திருடிச் சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் வெள்ளி வேல் திருட்டில் ஈடுபட்ட வெங்கடேஷ் சர்மா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.