"இப்பதாங்க நிம்மதியாக இருக்கோம். குடும்பத்தினரை, சொந்தம் பந்தங்களைப் பார்க்க முடியாமலேயே போயிடுவோம்னு நினைச்சோம். நல்லவேளையாக அரசு எங்களை இங்க கொண்டு வந்து விட்டு விட்டது" எனச் சொந்தங்களைக் காணும் சந்தோஷத்தில் கண்ணீர் மல்க பேசுகின்றனர் மாலத்தீவிலிருந்து கப்பற்படை கப்பல் மூலம் கொச்சினுக்கு வந்த தமிழர்கள்.
கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகப் பொதுப்போக்குவரத்து மற்றும் தனிப் போக்குவரத்திற்குத் தடைவிதித்து நாடெங்கும் ஊரடங்கினை அமல்படுத்தியது மத்திய, மாநில அரசுகள். இதனால் பணி நிமித்தம் காரணமாக வெளி நாடுகளில், வெளி மாநிலங்களில் வசித்தவர்கள் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்பொழுது மே 17- ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியினை துவக்கியது இந்திய அரசு. "வந்தே பாரத் மிஷன்" எனத் தலைப்பிலிடப்பட்ட மீட்பு பயணத்தில் மே 13 வரை 64 அரசு விமானங்களும், கப்பற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்களும் ஈடுபடுமென அரசால் அறிவிக்கப்பட்டது.
இதன்படி இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவுப் பகுதிகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்கும் முயற்சிகளை முடுக்கி, மீட்புப் பணி தொய்வில்லாமல் நடைப்பெற்று வருகின்றது. இதே வேளையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டு மாலத்தீவில் இருக்கும். இந்தியர்களை மீட்க இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல் அங்கு அனுப்பப்பட்ட நிலையில் 595 ஆண்கள், 103 பெண் பயணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் வெள்ளிக்கிழமையன்று கேரளாவிலுள்ள கொச்சினை நோக்கிப் புறப்பட்டது கப்பல். இதில் பயணம் செய்தவர்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 14 நபர்களும், 19 கர்ப்பிணிப் பெண்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவிலிருந்து இந்தியா புறப்பட்டுப் பயணம் செய்த மொத்தமுள்ள 698 இந்தியர்களில் கேரளா மாநிலத்தினை சேர்ந்தவர்கள் 440 நபர்களும், தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள் 187 நபர்கள், தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் 9 நபர்கள், ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த தலா எட்டு நபர்கள், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலா 7 நபர்கள், டெல்லியைச் சேர்ந்த நான்கு நபர்கள், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் கோவா மற்றும் அசாமில் இருந்து தலா ஒருவர் எனக் கப்பற்படை மற்றும் மருத்துவத்துறை தரப்பிலிருந்து கூறப்பபட்டது.
ஞாயிற்றுக்கிழமையன்று கொச்சின் துறைமுகத்திற்கு வந்த கப்பல் பயணிகளை இறக்கி விட்ட நிலையில், அங்கேயே காய்ச்சல், சளி மற்றும் கரோனா தொடர்புடைய அறிகுறிகள் இருக்கின்றதா? என அனைவரிடமும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவப் பரிசோதனையின் முடிவில் கேரளாவினை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல 40 பேருந்துகளையும் 50- க்கும் அதிகமான 4 சக்கர வாகனங்களையும் இயக்கியது கேரள அரசு. தமிழகத்தினை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல 7 அரசுப் பேருந்துகளை இயக்கிய தமிழக அரசு களியாக்கவிளை பகுதியில் 50 நபர்கள், கொல்லங்கோடு பகுதியில் 30 நபர்கள் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் 80 நபர்கள் மற்றும் மீதமுள்ளோர்களை கன்னியாகுமரி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகின்றது.
நாளைக்குள் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவின் பேரில் நோய்த் தொற்று இல்லாதவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், தொற்று உள்ளவர்கள் அந்தந்தப் பகுதிகளிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
"லாக் டவுன் பிரச்சனையால் குடும்பம், குழந்தைகளை விட்டு மன நிம்மதியில்லாமல் இருந்தோம். இப்பதான் நிம்மதியாக இருக்கோம். கண்டிப்பாக இன்னும் ஓரிரு நாட்களில் எங்களுடைய குடும்பத்தாரைப் பார்த்துவிடுவோம்.. சந்தோஷமே.!" என்கின்றனர் மாலத்தீவிலிருந்து மீண்ட தமிழர்கள்.