மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியதால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இருப்பினும் ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சியோ அதன் கூட்டணிக் கட்சிகளோ வெற்றிபெறவில்லை. குறிப்பாக, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.
தேர்தல் தோல்வி காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், கட்சியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகுகிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து விலக மாட்டேன், கமல்ஹாசனுடன் இருப்பேன் எனக் கூறியிருந்த நிலையில் விலகியுள்ளார்.
சந்தோஷ்பாபுவைத் தொடர்ந்து, சில காரணங்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியாவும் அறிவித்துள்ளார்.