புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மைதிலி. இந்த தம்பதியின் இரண்டாவது மகளான 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். எப்போதும் துருதுருவென இருக்கும் சிறுமியை அவரது பெற்றோர் மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி சிறுமி தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், சிறுமியை அந்த பகுதியில் இருந்த பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் குழந்தை கிடைக்காததால் பதற்றமடைந்த பெற்றோர், இச்சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் குழந்தை காணாமல் போன விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் 3 நாட்கள் ஆகியும் போலீசார் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகு அதே பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்காலில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அப்போது, இதை பார்த்தவுடன் அந்த இடத்தில் இருந்த சிறுமியின் உறவினர்கள் ஊர்மக்கள் என அனைவரும் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். ஒன்பது வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், புதுச்சேரி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் நீட்சியாக, சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதல்வர் ரங்கசாமி அதிரடியாக உத்தரவிட்டார்.
புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்ற முதியவரும், கருணாஸ் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கஞ்சா மற்றும் மது போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது தெரியவந்தது. மனைவியை பிரிந்து தனிமையில் இருக்கும் விவேகானந்தன் சிறுமி ஆர்த்திக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பழக்கம் ஆகியுள்ளார். சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார். சிறுமிக்கு ஐஸ்கீரிம் வாங்கி தருவதாகக் கூறி, அதே தெருவில் உள்ள தனது பாழடைந்த வீட்டின் மாடி பகுதிக்கு விவேகானந்தன் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, அவருடன் கூட்டுச் சேர்ந்த கருணாஸ் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, சிறுமியின் உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டிற்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் வீசிவிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே போல், இந்த கொலை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்பினர் என தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். குற்றவாளிகளுக்காக நாங்கள் யாரும் ஆஜராகப் போவதில்லை என்று புதுச்சேரி வழக்கறிஞர்கள் அறிவித்தனர்.
இந்த வழக்கில் தடயங்கள், சாட்சி ஆவணங்கள், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையில், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான விவேகானந்தன், மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாலை 5 மணியளவில் அவரது உடலை மீட்டு சிறைக் காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவேகானந்தன் தற்கொலை சம்பவம் தொடர்பாக சிறை நிர்வாகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக காவல்துறை மற்றும் சிறைத்துறை விரைவில் அறிக்கை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் பேசியபோது, “விவேகானந்தனும், கருணாஸும் விசாரணைக் கைதிகள் பிரிவில், தனி செல்லில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த செல்லின் வரண்டாவில்தான் இருவரும் படுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. கழிவறைக்கு மட்டும் உள்ளே சென்று வருவார்கள். இவர்கள் பயன்படுத்துவதற்காக தனித்தனியாக துண்டு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தான், கருணாஸின் துண்டை தன்னுடைய துண்டுடன் முடிச்சுப் போட்ட விவேகானந்தன், சிறைக் கம்பிகளில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் இருந்த கருணாஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் சடலத்தை மீட்டதாகக் கூறியுள்ளனர். அதே போல், சிறையில் இருந்த விவேகானந்தன், கடந்த மார்ச் மாதமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.