ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி வருவது உண்டு; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே 'மஹா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது. மஹா சிவராத்திரி என்று கண் விழித்து சிவனை மனம் உருகி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஐந்து சிவராத்திரிகளில் மஹா சிவராத்திரி விரதமே மிகப்பெரும் வழிப்பாடாகக் கொண்டாடப்படுகிறது. சிவனுக்கு உகந்த மஹா சிவராத்திரி அன்று சிவாலயங்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும். மஹா சிவராத்திரி அன்று இரவு 11.30 மணி முதல் இரவு 01.00 மணி வரை சிவனை வழிபடுவது மிகச்சிறப்பானது என்பது நம்பிக்கை.
மஹா சிவராத்திரி விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். புகழ்பெற்ற திருத்தலங்கலான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், தஞ்சை பெரிய கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், கடலூர் பாடலீஸ்வரர் கோயில், விருத்தகிரீஸ்வரர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும், சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரத நாட்டிய கலைஞர்களின் அரங்கேற்றமும் நடைபெற்று வருகிறது.