தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கடந்த நான்கு மாதங்களாக, இரண்டு யானைகள் விலை நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.
பாப்பாரப்பட்டி அருகே சோமனஅல்லி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முகாமிட்டிருந்த அந்த யானைகள், கூகுட்டமரத அள்ளி கிராமத்தில் விவசாயி ஒருவரை தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் யானைகளை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இரு யானையில் ஒன்று மக்னா யானை, அந்த யானைக்கு ஏற்கனவே கர்நாடக மாநில வனத்துறையினர் ஜிபிஎஸ் கருவி பொருத்தியுள்ளனர் என்பது தெரிய வந்தது. இதன் மூலம் கண்காணித்தபோது, நேற்று அதிகாலை மொரப்பூர் பிகினி வனப்பகுதிக்கு இடையே, சங்கிலி நத்தம் அருகே, ஈச்சம்பள்ளம் பகுதியில் யானைகள் முகாமிட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் அம்பாலா நாயுடு, மற்றும் பாலக்கோடு, ஒகேனக்கல், தர்மபுரி ரேஞ்சர்கள், கால்நடை டாக்டர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது மக்னா யானையுடன் இருந்த பெண் யானை தப்பிய நிலையில் மக்னா யானை மட்டும் அந்த பகுதியில் புளியமரம் அருகே சுற்றி வந்தது. அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கும்கி யானையான சின்ன தம்பியும் அங்கு வரவழைக்கப்பட்டது.
ஏர்கன் மூலம் நான்கு மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டது. ஆனாலும் அசராத மக்னா அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர், காலை 8 மணி அளவில் அரை மயக்கத்தில் காணப்பட்ட யானையை, கும்கி யானை மூலம் வனத்துறையினர் லாரியில் ஏற்றி, பொள்ளாச்சி அருகே ஆனைமலை முகாமிற்கு கொண்டு சென்றனர். யானையை பிடித்ததால் பொதுமக்கள் மற்றும் மலை கிராம வாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர், இருப்பினும் தப்பி ஓடிய மற்றொரு பெண் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.