“வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கரோனா கட்டுப்பாடு மக்களுக்கு மட்டுமல்ல..” என்றார், அந்த மதுரைவாசி. அவருடைய கவலையெல்லாம், மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தன்னைப் போன்ற பக்தர்களை, எப்போது அனுமதிக்கப்போகிறார்கள் என்பதுதான்.
“எப்படி பார்த்தாலும் மே 7- ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதும், உலகப் பிரசித்திபெற்ற அத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதும் நடந்தே தீரும். அதற்குள் இந்த கரோனாவை உலகத்தைவிட்டே விரட்டிவிடுவாள் அன்னை மீனாட்சி..”என, பெரிதும் நம்பிக்கையோடு சொன்ன அந்த அம்மன் பக்தர். “தினமும் ஆறுகால பூஜைகள் மீனாட்சியம்மன் கோவிலில் நடக்கின்றன. உலக நலனுக்காக, நாள்தோறும் பஞ்சகவி அபிஷேகம் செய்யப்படுகிறது. இடர்கள் அனைத்தும் விலகுவதற்காக திருநீற்றுப்பதிகமும் பாடப்படுகிறது.” என்றார் பரவசத்துடன்.

ரூ.354 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் நடந்துவரும் பணிகளை, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால் முற்றிலும் நிறுத்திவிட்டனர். ஆனாலும், மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியே, கிழக்கு சித்திரை வீதியில் கல் பதிக்கின்ற சாலைப்பணி உட்பட சகல பணிகளும் தடைபடாமல் நடந்து வருகின்றன.

ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாசலில் ’20-03-2020 முதல் 31-3-2020 வரை பக்தர்கள் அனுமதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.’என்ற பழைய அறிவிப்பையே காண முடிந்தது.

‘ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், இங்கே இத்தனை பேர் வேலை பார்க்கின்றார்களே?’என்று அங்கே மேற்பார்வையில் ஈடுபட்டிருந்தவரிடம் கேட்டோம். “இங்கே நீங்க பார்க்கிற எல்லாருமே வடமாநிலத்துக்காரங்க. கரோனாவுக்கு பயந்து நிறைய பேரு அவங்க சொந்த ஊருக்கு போயிட்டாங்க. சித்திரை திருவிழா வருதுல்ல. மிச்சம் இருக்கிற ஆட்களை வச்சி வேலை வாங்கிக்கிட்டிருக்கோம்.” என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜனோ, “கரோனா அச்சுறுத்தல் முற்றிலும் நீங்கி, 144 தடையுத்தரவெல்லாம் விலக்கப்பட்டு, முறையான அரசு அறிவிப்பு வெளிவந்த பிறகுதான், சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.”என்கிறார்.
‘மதுரை சித்திரை திருவிழா ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. கரோனா விரட்டப்பட்டு, மே 4- ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும். 7- ஆம் தேதி, அழகர் வைகை ஆற்றில் இறங்குவார்’ என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.