இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''மதுரை இன்று ஒரு சுற்றுலா நகரமாக மட்டும் இருக்கிறது. இது ஒரு தொழில் நகரமாக உருவெடுக்க வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை நாம் உருவாக்கியிருக்கிறோம். பொதுவாக ஒரு நகரம் தொழில் நகராக உருவாக வேண்டும் என்றால் போக்குவரத்து வசதி வேண்டும், தண்ணீர் வசதி வேண்டும், மருத்துவ வசதி வேண்டும். எல்லா வசதியும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மருத்துவ வசதி மதுரையில் தான் அதிகமாக இருக்கிறது. அந்த அளவிற்கு மதுரையை அதிமுக காட்சி காலத்தில் உருவாக்கி இருக்கிறோம் கடந்த 10 ஆண்டுகளில்.
ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மிக விரைவாக மதுரையை அழகாகக் கொண்டு வந்திருக்கிறோம். அந்த பணிகள் எல்லாம் முடியும்போது மதுரை மிக அழகாக, மிகச் சிறப்பாக இருக்கும். 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கின்ற வகையில் முல்லைப் பெரியாறு அணை திட்டம் நிறைவேறும் என மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். 2023-ல் நிறைவேற்றி விட்டால் தங்குதடையின்றி வீட்டுக்குள்ளேயே தண்ணீர் கிடைக்கும். வெளியே பெண்கள் வர வேண்டியதில்லை. கூடுதலாக இன்று பறக்கும் பாலம் எல்லாம் மதுரையில் வந்திருக்கிறது போக்குவரத்து வசதிக்காக. அதெல்லாம் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தது. கடந்த கடந்த 10 ஆண்டுகளில் வைகையாற்றில் வடபகுதியும் தென்பகுதியும் இணைத்து நான்கு பாலங்கள் கட்டியிருக்கிறோம். திமுக ஆட்சி நினைத்தால், தமிழக முதல்வரும், தொழில்துறை அமைச்சர் தென்னரசுவும் நினைத்தால் பல தொழில்கள் அமைவதற்கு வாய்ப்பாக மதுரை அமையும்''என்றார்.