கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்த பின் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அ.தி.மு.க. ஆட்சியில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் சென்னையே மிதந்தது. 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படாத தன்மையால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்பே 19,500 மரக்கிளைகள் வெட்டப்பட்டன. சென்னை புவியியல் அமைப்புக்கு ஏற்ப வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழை, வெள்ளத்தின் போது சிலர் அரசியல் லாபத்திற்காக விமர்சனம் செய்தனர். பேரிடர் காலத்தில் அரசியல் செய்வோருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. சென்னையில் 44 தங்கு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 1,545 மருத்துவ முகாம்கள் சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டன. சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணப்படும்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அ.தி.மு.க. பொய்யான தகவலைப் பரப்பி வருகிறது. முழுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 68,652 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயன்றளவு பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்த சூழ்நிலையிலும் உழவர்களை கண்போல் காக்கும் அரசு தி.மு.க. அரசு. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தூர்வாரப்பட்டதால் காவிரி நீர் கடைமடை வரை சென்றடைந்தது. சென்னையில் 270 கி.மீ. தொலைவுக்கு மழைநீர் வடிகால்கள் ஏற்கனவே தூர்வாரப்பட்டன." இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.