தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசியில் தபால் வாக்கு பதிவிட்டதை வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி, கணவர் கணேச பாண்டியன் நண்பர் செந்தில்குமார் ஆகியோர் கைதாகியுள்ளனர். தபால் வாக்கு பதிவுக்கு சென்ற பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணியின் கணவர் கணேச பாண்டியன் ஒரு கட்சியில் உள்ளார். தபால் வாக்கை தனது கட்சிக்கு போட்டதை நிரூபிக்க போட்டோ எடுத்து அனுப்ப சொல்லியதை அடுத்து மனைவி கிருஷ்ணவேணி கணவருக்கு மொபைலில் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். மனைவி அனுப்பிய போட்டோவை கணேச பாண்டியன் அவருடைய நண்பர் செந்தில்குமார் என்பவருக்கு அனுப்பியுள்ளார். இதை ஃபேஸ்புக்கில் செந்தில்குமார் பகிர்ந்த நிலையில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.