Skip to main content

காதலுக்கு எதிர்ப்பு; பள்ளி மாணவன் தற்கொலை; விபரீத முடிவெடுத்த மாணவி

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

madurai palamedu twelth students incident 

 

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 17). தந்தை இறந்து விட்டதால் தனது தாயாருடன் சுரேஷ் வசித்து வந்துள்ளார். பாலமேட்டில் உள்ள பள்ளி ஒன்றில் சுரேஷ் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் படித்து வந்த அதே வகுப்பில் பாலமேடு அருகே உள்ள சேந்தமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடைய மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 17) என்பவரும் படித்து வந்துள்ளார். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில், இது குறித்து கவிதாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கவிதாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது தாயாரிடம் சுரேஷ் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்குத் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த சுரேஷ், கவிதாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சுரேஷின் தற்கொலை செய்தியை அறிந்த கவிதா, நேற்று மதியம் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் அமைந்திருக்கும் மற்றொரு வீட்டிற்குச் சென்று கவிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இரு சம்பவ இடங்களுக்கும் சென்று மாணவன் மற்றும் மாணவியின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் மற்றும் மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்