தமிழகத்தில் கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க ஏலம் விட, வணிக ரீதியாக மீன் வளர்க்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்
" மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை.இதனால் மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.மதுரை மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீர்யின்றி பாலைவனமாக மாறிவிடும்.நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்,மேலும் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களால் நீர் நிலத்தடிற்குள் செல்லாமல் நீரோட்டம் தடைபடுகிறது.மதுரை வண்டியூர் கண்மாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது. வண்டியூர் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அதிகாரிகள் துணையுடன் பட்டாவும் வழங்கபட்டுள்ளது.
வண்டியூர் கண்மாய் முழுவதும் மாசடைந்துள்ளது.மதுரை மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை மாவட்டத்தில் கழிவு நீர் குடிநீருடன் கலப்பதை தடுக்கும் விதமாக கழிவு நீர் குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்களை குறிப்பிட்ட இடைவெளி தொலைவில் அமைக்க வேண்டும்.
எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
முந்தைய விசாரணையின் போது நீர்நிலைகளின் மையபகுதியில் முழுவதுமாக ஆக்கிரமிப்புகள் இருந்தால் நோட்டீஸ் கொடுக்காமல் கூட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் கருத்து கூறியிருந்தார்.
தமிழகத்தில் நீர்நிலைகள்,நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்களை பத்திரபதிவு செய்து பட்டா வழங்க கூடாது என பதிவுதுறை தலைவர் அனைத்து மாவட்ட பதிவாளருக்கு சுற்றறிகை அனுப்ப வேண்டும்.மேலும் தமிழகத்தில் நீர்நிலைகள்,நீர்வழி பாதைகளில் கழிவு நீர்,பிளாஸ்டிக் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டனர்.
இந்த மனு நீதிபதிகள் ராஜா,கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வழக்கறிஞர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, வாலிநோக்கம்,கடலாடி, போன்ற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்குள்ள நீர்நிலைகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். கண்மாய்,குளங்களில் மீன் வளர்க்க ஏலம் எடுத்தவர்கள்,மீன் பிடிப்பதற்காக குளத்து நீரை வீணாக வெளியேற்றி விடுகின்றனர்.மேலும் பல இடங்களில் தொழில் போட்டி காரணமாக. குளத்தில் விஷம் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகின்றனர்.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதனையடுத்து தமிழகத்தில் கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க ஏலம் விட, வணிக ரீதியாக மீன் வளர்க்க இடைகால தடைவிதித்து வழக்கினை நாளை நவம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.