கடந்த செப்.10 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை பல்வேறு தனியார் நிறுவனங்களின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தமிழ்நாடு மிக வேகமாக முதலீடுகளை தன்பால் ஈர்க்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
ட்விட்டரில் இதற்கு பின்னூட்டம் இட்ட ஜான் விக் என்பவர் மதுரை இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக சிப்காட் மற்றும் டைடல் பார்க் போன்ற தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு போதிய இடங்களை ஒதுக்கீடு செய்யாததே மதுரையின் பிரச்சனையாக இருப்பதாக கூறினார். இந்த பின்னூட்டத்திற்கு பதில் அளித்த நிதியமைச்சர் இதற்காக பலநாட்களாக பணிசெய்து வருவதாகவும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல செய்தி விரைவில் மதுரைக்கு வர இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு தெற்கு மண்டல மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “எளிதாக தொழில் துவங்கும் மாநிலத்தில் தமிழகம் 14ம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்து விரைவில் முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு.
தகவல் தொழில் நுட்ப புரட்சியை தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் எடுத்துச் செல்ல கோவையில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை உருவாக்கியதுடன் திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் நியோ டைடல் பூங்காக்களை அரசு உருவாக்கி வருகிறது.
அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து முன்னோடி டைடல் பார்க் மதுரையில் நிறுவப்பட இருக்கிறது. இந்த பூங்கா டைடல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படும். மதுரையின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும்” என கூறியுள்ளார்.