விளாத்திகுளம் இடைத் தேர்தலில் அதிமுகவில் 'சீட்' கிடைக்காததால், மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நேற்று (25-03-2019) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு பிற்பகல் 1-00 மணிக்கு மனுத் தாக்கல் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், காலை 9 மணி முதலே சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆதரவாளர்கள் விளாத்திகுளம் நோக்கி வரத் துவங்கி விட்டனர். இதேபோல், அதிமுக சார்பில் களம் இறங்கும் சின்னப்பனும் மனுத்தாக்கல் செய்ததால், அவரும் படை பலத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால்,ஆயிரம் பேரை கூட அவரால் திரட்ட முடியவில்லை.
குளத்தூர், எட்டையபுரம், புதூர், நாகலாபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து மார்க்கண்டேயனுக்காக வந்தவர்கள், வேனில் ட்ரம்செட், கரகாட்டம், தப்பாட்டம் முழங்க விளாத்திகுளம் நகரில் வீதியுலா வந்தனர். அவர்கள் எல்லாம் சின்னப்பனுக்காக வந்த கூட்டம் என காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை, கெடுபிடியும் காட்டவில்லை. ஆனால், வந்த கூட்டம் எல்லாம் 'அம்பாள் கோசாலை' பக்கம் திரும்பிய பிறகே, சேர்ந்த கூட்டம் எல்லாம் எதிர்பார்ட்டிக்கு என்பது உளவுத்துறைக்கு உரைத்திருக்கிறது.
இதுஒருபுறம் இருக்க, சின்னப்பன் மனு தாக்கல் செய்யும்போது உடனிருப்பதற்காக கோவில்பட்டியில் இருந்து காரில் வந்தார் கடம்பூர் ராஜூ. படர்ந்தபுளி அருகே வந்தபோது, சாரை சாரையாக வேனில் வந்தவர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்திருக்கிறார் அவர். ஆனால், வேனில் இருந்தவர்களோ மார்க்கண்டேயன் வாழ்க என கோஷமிட்டுள்ளனர். அதன்பிறகே அவர்கள் ஆப்போசிட் பார்ட்டி என தெரிந்திருக்கிறது கடம்பூராருக்கு.
நேராக விளாத்திகுளம் வந்த கடம்பூர் ராஜூ, "லோடு வண்டிகளில் வருகிற யாரையும் சிட்டிக்குள்ள அனுமதிக்காதீங்கன்னு” காவல்துறைக்கு உத்தரவு போட்டுள்ளார். இதனால் விளாத்திகுளம் மேம்பாலம் அருகேயே அனைத்து வண்டிகளையும் மறிக்க, கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதன்பிறகு போலீஸாரின் தடுப்புகளையும் மீறி மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் நகருக்கு உள்ளே வந்திருக்கின்றனர்.
11-00 மணிக்கு சின்னப்பனும் மனுத்தாக்கல் செய்துவிட்டார், மந்திரியும் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், மார்க்கண்டேயனை நடுவழியிலேயே நிறுத்தி வைத்து கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தினர் போலீஸார். ஒருகட்டத்தில் வேனில் இருந்து கீழே இறங்கிய மார்க்கண்டேயன் நடந்து செல்ல ஆரம்பித்த உடனே, போலீஸாராலும் அவரை தடுக்க முடியவில்லை. மொத்தத்தில் நேற்றைய தினம் பெரும் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டிவிட்டார் மார்க்கண்டேயன். இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறினால், அதிமுக டெப்பாசிட் இழப்பது உறுதி.!