கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் ஜாமீன் மற்றும் தண்டனை ரத்து செய்யக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அலுவலகத்திலேயே வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். தமிழகம் முழுக்க இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கிராம நிர்வாக அலுவலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் தாமிரபரணி ஆற்றில் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் சட்டவிரோதமாக மணல் கடத்தியது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரான லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனால் ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலையில் ஈடுபட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டுவதோடு, தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணல் கடத்தல் தொடர்பாக புகாரளித்த விஏஓ கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகக் கொடூரமானது என தெரிவித்து அவர்களுடைய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.