சென்னையில் தமிழக அரசைக் கண்டித்தும், சட்டசபை மரபுகளை மீறியதாக சபாநாயகரை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்திருந்த நிலையில் தற்பொழுது அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதற்காக அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறை அவர்கள் அனைவரையும் சென்னை எழும்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.தற்போது எடப்பாடி தரப்பு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அப்பொழுது வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் ''சட்டவிரோதமான செயலா உண்ணாவிரதம் இருப்பது? மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தார், உப்புச் சத்தியாகிரகம் செய்தார். அதேபோல் நாட்டினுடைய விடுதலைக்காக பல்வேறு அறப்போராட்டங்களை கடைபிடித்து இருக்கிறார். நாங்களும் அவரைப் போன்று அறப்போராட்டத்தை தான் கடைபிடிக்க வேண்டும் என்று நேற்று எழுதிக் கொடுத்தோம். அதற்கு அனுமதி கொடுத்துவிட்டு போயிருக்கலாமே. இன்னைக்கு காலையிலிருந்து எப்படிப்பட்ட எழுச்சி... பாத்தீங்களா. ஒன்பது மணிக்கே போலீசார் எல்லாரையும் இழுத்து வண்டியில் ஏற்றி, பாருங்க என் கையெல்லாம் ஸ்கிராச் ஆகிப்போச்சு. ஆடு மாடு மாதிரி பஸ்ல எல்லாம் ஏத்தி, பத்திரிகைகாரங்க உங்களுக்கும் அடி உதையெல்லாம் வாங்க வைத்துவிட்டார்கள். சட்டமன்றத்தைப் பொறுத்தவரை அது திமுகவின் அறிவாலயம் ஆகிவிட்டது. அங்கு ஸ்டாலின், உதயநிதி புகழ் பாடுவோருக்குத்தான் இடம். ஓட்டுப்போட்ட மக்களுக்கு வயிறு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது'' என்றார்.