![Local elections at the end of September! - Tamil Nadu Election Commission results?](http://image.nakkheeran.in/cdn/farfuture/NBgC-PDpJF5i4EgCA0w6oaWbYOfz2VfDQ0-rlProIHQ/1629305308/sites/default/files/inline-images/state332.jpg)
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமல் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழகத் தேர்தல் ஆணையம் தயாரானது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மாவட்டம் வாரியாகத் தேர்தல் ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் கமிஷனர் பழனிகுமார் செய்து வருகிறார். 9 மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி போன்றவை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான தேர்தல் தேதி செப்டம்பர் 15- ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இடையே கடும்போட்டி நிலவ வாய்ப்புள்ளது. 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும் என்று இரு கட்சிகளும் வரிந்து கட்டி வருகின்றன. அதனுடைய கூட்டணிக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.