சேலம் மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 1754 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று (டிசம்பர் 30) தேர்தல் நடக்கிறது. 5923 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. முதல்கட்டமாக டிசம்பர் 27ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (திங்கள் கிழமை) நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிகிறது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்த அளவில், மொத்தம் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஒன்றியங்கள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. முதல்கட்ட தேர்தலில், 81.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 76004 வாக்காளர்கள், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் 120378 வாக்காளர்கள், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 59530 வாக்காளர்கள், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 77089 வாக்காளர்கள், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 89108 வாக்காளர்கள், சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 69070 வாக்காளர்கள் தலைவாசல் ஒன்றியத்தில் 109942 வாக்காளர்கள் மற்றும் வாழப்பாடி ஒன்றியத்தில் 67658 வாக்காளர்கள் என மொத்தம் 668779 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மேற்சொன்ன எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 1173 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி சார்பான தேர்தலில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 119 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதை அடுத்து, மீதமுள்ள 117 பதவிகளுக்கு 505 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர். கட்சி சார்பற்ற தேர்தலில் 191 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, 186 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இவற்றுக்கு 760 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதேபோல், மேற்கண்ட எட்டு ஒன்றியங்களில் மொத்தமுள்ள 1683 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 244 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எஞ்சியுள்ள 1439 பதவிகளுக்கு மொத்தம் 4596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆக, மேற்கண்ட எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2005 பதவிகள் உள்ளன. இவற்றுக்கு 251 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மீதமுள்ள 1754 பதவிகளுக்கு 5923 பேர் இன்றைய தேர்தல் களத்தைச் சந்திக்கின்றனர்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகளும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படக்கூடிய அழியாத மை முதல் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட 72 வகையான பொருள்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட தேர்தல் பணிகளில் 9500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தவிர, காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவில் முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.