தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. இதில் ஒரு சில பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகள் மாற்றி வழங்கப்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி மதுரை, கடலூர், தூத்துக்குடி, தேனி, நாகை ஆகிய மாவட்டங்களில் 9 வாக்குச்சாவடிகளில் இன்று (01.01.2020) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம் விலங்கல்பட்டு கிராம ஊராட்சி வார்டு 242- வது வாக்குச்சாவடி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாலுமாவடியில் 67, 68, 69, 70, 71- வது வாக்குச்சாவடிகளில் இன்று (01.01.2020) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் தணிக்கோட்டகம் கிராமத்தில் 119- வது வார்டிலும், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட 91- வது வார்டிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல் தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராம ஊராட்சியில் 52- வது வார்டிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மறுவாக்குப்பதிவு இன்று (01.01.2020) காலை 07.00 மணிக்கு தொடங்கும் என்றும், மாலை 05.00 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜனவரி 2- ஆம் தேதி) எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.