Skip to main content

ஒரு ஓட்டுக்கு 1 லட்சம், 1 பவுன் தங்கம்... ஏமாற்றப்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர்!

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

jkl

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர மன்றம் 33 வார்டுகளை கொண்டது. அதிமுக 15, திமுக 12, மதிமுக, காங்கிரஸ் தலா 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுயேட்சை தலா ஒரு கவுன்சிலர்கள் என உள்ளனர். திமுக அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள், சுயேட்சையோடு சேர்த்து திமுகவுக்குச் சாதகமாக 18 கவுன்சிலர்கள் இருந்தனர். நகரமன்ற தலைவர் பதவி திமுகவின் ஆரணி நகரசெயலாளர் ஏ.சி.மணி -க்கு என தலைமை அறிவித்தது. துணைத்தலைவர் பதவியைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. காங்கிரஸ் கவுன்சிலர் மருதேவியை அறிவித்தது.

 

நகரமன்ற தலைவர் தேர்தலில் ஏ.சி.மணி, அதிமுக கவுன்சிலர் பாரி பாபு இருவரும் போட்டிப்போட்டனர், திமுக மணி 20 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பாரி பாபு 13 வாக்குகளை மட்டுமே பெற்றார். மதியம் நகர மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மருதேவி, அதிமுக சார்பில் பாரிபாபு தேர்தலில் நின்றனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக பாரிபாபு 18 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 15 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

 

சேர்மன் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் சிலர் வாக்களித்தனர். அதேபோல் துணைத்தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் சிலர் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறவைத்துள்ளனர். எல்லாம் சாதிப்பாசம் என்கிற குரல்கள் சமூக வலைத்தளத்தில் திமுக தொண்டர்களே கூறிவருகின்றனர். கடந்த எம்.எல்.ஏ தேர்தலில் இதே சாதிப்பாசத்தை சில திமுக நிர்வாகிகள் காட்டியதால்தான் திமுக வேட்பாளர் அன்பழகன் தோற்றுப்போனார், அதிமுக இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இப்படி தோற்றிருக்கமாட்டோம், நம்பி வந்த காங்கிரஸ்சை தோற்கடித்துவிட்டு திமுகவைச் சேர்ந்த அவைத்தலைவர் மணியும், வைஸ்சேர்மன் அதிமுக பாரி்பாபுவும் எப்படி நகராட்சியில் கொஞ்சி குலாவுகிறார்கள் என்பதை இந்த போட்டோக்களை பாருங்கள், இதைப் பார்க்கும்போது காங்கிரஸ் கவுன்சிலர் மனநிலை எப்படி இருந்திருக்கும் எனக் கேட்கிறார்கள்.

 

மறைமுக தேர்தலில் துணைத்தலைவருக்கு ஓட்டுப்போட திமுக மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த 18 கவுன்சிலர்களில் துணைத்தலைவர் வேட்பாளரைத் தவிர்த்து மீதி 17 கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் பணமும், ஒருபவுன் தங்கக் காயினும் தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு வாங்கியுள்ளார்கள். வாங்கிய 17 கவுன்சிலர்களில் 3 பேர் தங்களது ஓட்டு அதிமுக வேட்பாளருக்குப் போட்டு வெற்றி பெறவைத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சியாகி நொந்துபோன துணைத்தலைவர் தரப்பு புலம்பிக்கொண்டுள்ளது. இப்படி நம்பிக்கை துரோகம் செய்யலாமா என கவுன்சிலர்களை நோக்கி கேள்வி எழுப்பியபோது, நாங்க உனக்குதான் ஓட்டுப்போட்டோம் எனச்சொல்கிறார்களாம்.

 

 

சார்ந்த செய்திகள்