விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சிறு மதுரை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் - ராஜி தம்பதிகளுக்கு ஜெயராஜ், ஜெயஸ்ரீ, ராஜேஸ்வரி, ஜெபராஜ் என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஜெயபால் தனது ஊரில் இரண்டு இடத்தில் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ தீயில் எரிந்த நிலையில் கடையில் கிடப்பதாகச் செல்போன் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து பதறியடித்துக் கடைக்கு ஓடி பார்த்திருக்கிறார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்துள்ளதைப் பார்த்து கதறிய பெற்றோர், உடனடியாகத் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெயஸ்ரீ அளித்த மரண வாக்குமூலத்தில், அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் அருவியின் கணவர் முருகன் மற்றும் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து கடைக்குள் புகுந்து தன்னை கட்டிப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவி ஜெயஸ்ரீ, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஜெயஸ்ரீ மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வருகிறது. அதில், கடந்த சனிக்கிழமை இரவு சிறுமியின் தந்தை ஜெயபால் கடைக்குப் பீடி வாங்க வந்த பிரவீன்குமார் ஜெயபாலின் பெரிய மகனைத் தாக்கியுள்ளார். இந்தப் பிரச்சனை எங்களால் என நினைத்த ஜெயபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே எங்கள் மீது புகார் கொடுக்கச் செல்கிறாயா என்ற கோபத்தில் ஜெயபால் வீட்டிற்குச் சென்றபோது கடையில் சிறுமி ஜெயஸ்ரீ இருந்தாள். இந்தச் சிறுமி இதற்கு முன்பு எங்களுக்கு இடையே நடக்கும் சண்டையின் போது அதிகமாக வாய்ப் பேசுவாள். அதனால் தான் அந்தச் சிறுமியின் வாயடைத்துக் கட்டிப்போட்டு எரித்துவிட்டோம் என வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.