ஜவுளி, ஆயத்த ஆடை, மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையின் சந்தையாக ஈரோடு உள்ளது. அதே போல் கட்டுமான தொழிலும் பெருகி வருகிறது. இந்த தொழில்களில் பணியாளர்களாக ஈடுபடுவது முப்பது சதவீதம் வட மாநிலத்தவர்கள் தான். ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் வட மாநிலத்தவர்கள் தான்.
குஜராத், கொல்கத்தா, ராஜஸ்தான், உபி., பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் தொழிலாளர்களாக இங்கு உள்ளார்கள். கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள்.
அவர்களை முறைப்படுத்த முடிவு செய்த ஈரோடு மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் சக்திகணேசன் ஐ.பி.எஸ்., வட மாநில இளைஞர்கள் சிம் கார்டு பெறும் முறைக்கு சில விதிகளை பின்பற்ற கூறியுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ளஈரோடு டவுன் பவானி, கோபி, சக்தி உட்பட உட்கோட்டங்களில் அந்தந்த டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது. சிம் கார்டு விற்பனையாளர்களை அழைத்து நடத்தப்பட்டது.
அதில் சாலையோரங்களில் குடை அமைத்து சிம் கார்டுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் மேலும் வட மாநிலத்தவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பணி புரிந்து கொண்டு புதிதாக சிம்கார்டு வாங்க முயன்றால் இங்குள்ளவர்களுக்கு கொடுப்பது போல் ஏதாவது ஒரு அடையாள அட்டையை மட்டும் அதன் நகலை மட்டும் வாங்கிக் கொண்டு சிம் கார்டு கொடுக்கக் கூடாது - அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை, அந்த நிறுவன உரிமையாளரின் அனுமதி கடிதம் ஆகியவை இருந்தால் மட்டும் தான் புதிய சிம் கார்டு வழங்க வேண்டும்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் சிம் கார்டு விற்றாலோ அல்லது வாங்கினாலோ வழக்கு பதிவு செய்யப்படும். என புதிய விதிகளை கூறி இனிமேல் இது போல நடக்குமாறு போலீசார் கூறியிருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்பதெல்லாம் மத்திய அரசோடு இருக்கட்டும் தமிழ்நாட்டில் இங்குள்ளவர்களின் அடையாளம் இருந்தால் தான் வட மாநில இளைஞர்கள் இனி சிம் கார்டு பெற முடியும்.