உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் மட்டும்மே அரசியல் கட்சிகள் நேரடியாக போட்டியிட முடியும். அந்த பதவிகளுக்கு மட்டும்மே அரசியல் கட்சிகளின் சின்னங்கள் கிடைக்கும். கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம வார்டு உறுப்பினர்களுக்கு அரசியல் கட்சிகள் நேரடியாக போட்டியிட முடியாது. அரசியல் கட்சிகளின் சின்னங்களும் கிடைக்காது. அந்த பதவிகளை பொருத்தவரை போட்டியிடும் எல்லோரும்மே சுயேட்சைகள் கணக்கு தான். இதனால் கிராமங்களில் இந்த இரண்டு பதவிகளில் மட்டும் கட்சி பார்க்காமல் வாக்களிப்பார்கள்.
ஊராட்சி மன்ற தலைவர் தேர்வு என்பது, மக்களின் எண்ணம், சாதி, சொந்தம், பந்தம் போன்றவையே தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் பெரும்பாலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நிற்பவர்கள் பிரச்சாரத்தின் போது செலவு செய்வார்களே தவிர பணமாக பெரிய அளவில் வாக்காளர்களுக்கு தரமாட்டார்கள். இதுதான் கடந்த கால நடைமுறை. இப்போதும் பெரும்பாலான கிராமங்களில் அப்படித்தான் வேட்பாளர்கள் நடந்துக்கொண்டார்கள்.
ஓட்டுக்கு காமாட்சியம்மன் விளக்கு , வெள்ளி காசு, சில்வர் தவளை , சில்வர் அன்னக்கூடை என விதவிதமாக பொருட்கள் தருவார்கள். இந்த முறையும் பெரும்பாலான கிராம பஞ்சாயத்து தலைவர்கள் இப்படிப்பட்ட பரிசு பொருட்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்தார்கள்.
அதேப்போல் பூட்டு சின்னத்தில் நிற்பவர்கள் பூட்டு தருவது, சீப்பு சின்னத்தில் நிற்பவர்கள் சீப்பு தருவது, புடவை தருவது என்றும் வாரி வழங்கினர். முதல் கட்ட தேர்தல் நாளான நேற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஆளும்கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்கள் ஒரு ஓட்டுக்கு 100 ரூபாய் சில வார்டுகளில் அதிகபட்சமாக 200 என தந்துள்ளனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அதைக்கூட வழங்கவில்லை.
ஆனால் பெரும்பாலான ஊராட்சி மன்ற தலைவர்கள் மேலே குறிப்பிட்ட பரிசு பொருட்களை தந்ததோடு, ஓட்டுக்கு 300, 500 எனவும் பெரும்பாலான தலைவர்கள் தந்துள்ளார்கள். சில ஊராட்சி மன்றத்தில் வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் தருவது போல அதிக பட்ச தொகையை தந்து வாக்காளர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளார்கள். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 9 ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் ஒரு வாக்குக்கு அதிகளவில் பணம் தந்த கிராம ஊராட்சி எதுவென விசாரித்தோம்.
தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கொளமஞ்சனூர் பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தந்துள்ளனர். கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் கொளக்குடி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதிகபட்சமாக ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் தந்தார்கள் என்கிறார்கள். திருவண்ணாமலை ஒன்றியத்தில் கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் தந்து வாக்காளர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்கள் வேட்பாளர்கள் எனக்கூறுகிறார்கள்.
துரிஞ்சாபுரம் ஊராட்சியில் வரும் இனாம் காரியந்தல் ஊராட்சியில் 1200 ரூபாய் மதிப்புள்ள ஒரு சிப்பம் அரிசி, 500 ரூபாய் பணம், 10 கிராம் வெள்ளி காசு தந்ததாக கூறப்படுகிறது. இப்படித்தான் மற்ற 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்சயாத்துக்களில் சில பஞ்சயாத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வாரி வழங்கியுள்ளதைக்கேட்டு எம்.எல்.ஏக்களே மிரண்டு போய்வுள்ளார்கள்.
எம்.எல்.ஏ தேர்தலின்போதே அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் தான் வாக்காளர்களுக்கு தந்தார்கள். இடைத்தேர்தலில் நடைபெறும் தொகுதியில் மட்டும் தான் ஓட்டுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை தந்தார்கள். சில தொகுதிகளில் 5 ஆயிரம் அளவுக்கு தந்தார்கள். எம்.எல்.ஏ தேர்தலில் நின்றபோது வாங்கிய கடனை செலுத்த முடியாமல் சில எம்.எல்.ஏக்கள் இப்போதும் தவிக்கிறார்கள்.
அப்படியிருக்க ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற சிறிய பஞ்சாயத்துகளின் தலைவர் வேட்பாளர்கள் கூட 20 லட்சங்களுக்கு மேல் செலவு செய்வதை பார்த்து மக்களே அதிர்ச்சியாகிப்போய்வுள்ளனர். 5 வருட பதவிக்கு இவ்வளவு செலவு செய்து வெற்றி பெறும் ஊராட்சி மன்ற தலைவரின் ஒரு மாத ஊதியம் 1500 ரூபாய் மட்டும்மே என்பது குறிப்பிடதக்கது.