அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (04/02/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. காணொளி, ஹைபிரிட் முறையிலும் விசாரணை நடைபெறும். வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகும் மனுதாரர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் ஆகும். வழக்கறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர் அறைகள் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படவும் அனுமதி அளிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகங்களில் உள்ள உணவகங்கள், நூலகங்கள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி இல்லை. அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.