உழைப்பதற்கு இரவு, பகல் என்ற பேதம் கிடையாது. அதுதான் சிவகாசி. இந்திய தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் கூட, உழைத்துக் கொண்டிருப்பார்கள். சிவகாசி மக்களின் இந்த உழைப்பை நேரில் பார்த்துவிட்டு, குட்டி ஜப்பான் என்று பெயர் சூட்டி வியந்தார், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. அப்படி ஒரு பெயரைப் பெற்ற சிவகாசி, கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்குக்காக, மொத்தமாக இன்று தன்னை இழுத்து மூடிக்கொண்டது. சிவகாசி என்று பெயர் வருவதற்குக் காரணமான சிவன் கோவிலும்கூட பக்தர்களை இன்று அனுமதிக்கவில்லை.
அனைத்து ரயில்களும் ரத்து என்று அறிவிப்பு செய்திருக்கும் சிவகாசி ரயில் நிலையத்தில் கதவு சாத்தப்பட்டு பூட்டு தொங்கியது. முக்கிய சாலைகள் அனைத்துமே ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்து நிலையம் துடைத்துப் போட்ட மாதிரி பளிச் என்றிருந்தது. பொதுக்கழிப்பறை ஒன்றில் பணியாற்றும் அரிச்சந்திரன் “என்னன்னு தெரியல சார்.. ஒண்ணுக்கு ரெண்டுக்கு கூட இன்னிக்கும் யாரும் வரல. கரோனாவுக்கு பயந்து யாரும் வெளிய தலைகாட்டல.” என்றார்.
சுமார் 7 கி.மீ. தூரம் சிவகாசியை சுற்றிவந்தபோது, ஒரு இடத்தில் சாலையோர கரும்புச்சாறு கடை இயங்கியது. இன்னொரு இடத்தில் தர்பூசணி பழங்களை விற்றுக் கொண்டிருந்தனர். அந்த வியாபாரிகளும், “சம்பாதிக்கணும்கிற நோக்கம் சத்தியமா இல்ல. ஏதோ ஒண்ணு ரெண்டு பேருதான் வெயில்ல வெளிய வர்றாங்க. நாக்கை நனைக்கிறதுக்கு கரும்புச்சாறோ, தர்பூசணியோ அவங்களுக்கு தேவைப்படும்ல.” என்றனர் தயக்கத்தோடு.
இதற்குமுன் இப்படி ஒரு சிவகாசியை யாரும் கண்டதில்லை. கரோனா வைரஸ் விஷயத்தில் ஒருமித்த உணர்வுடன் சிவகாசியும் ஊரடங்கை கடைப்பிடித்துள்ளது.