விழுப்புரம் மாவட்டம், குமார குப்பத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பிரகாஷ். இவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், அந்தக் கடிதத்துடன் ரூ.500 மணியாடர் செய்துள்ளார். இந்தச் செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசுபொருளாகியுள்ளது.
சமூக ஆர்வலர் பிரகாஷ் அனுப்பியுள்ள கடிதத்தில், “விழுப்புரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியினர் வைத்த பேனர் காற்றில் பறந்து கல்லூரி மாணவி மீது விழுந்து அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் தலையிட்டு இது போன்ற டிஜிட்டல் பேனர்களை வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவையும் மீறி அரசு கட்டிடங்களின் சுவர்களில் விளம்பரங்கள், மக்கள் கூடும் பொது இடங்களில் உயரமான டிஜிட்டல் பேனர்கள் வைப்பது ஏன்? இது விதி மீறல் இல்லையா? இந்த விதி மீறல்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளது. எனவே, தமிழகத்தின் உயர் அதிகாரிகளான தாங்கள் இருவரும் விழுப்புரம் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாங்கள் வந்து செல்லும் வழிச் செலவுக்கு மேற்படி பணத்தை அனுப்பி உள்ளேன். இந்தத் தொகை மூலம் சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு வந்து செல்ல உதவியாக இருக்கும்” என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.