சென்னையில் முக்கியக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புறநகர் ரயில்களில் ரூட் தல பிரச்சனைகளில் ஈடுபட்டு, கல்லூரி மாணவர்களிடையே அவ்வப்போது கடுமையான தாக்குதல்களும் நடைபெற்று வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களின் மோதலில் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் மோதலில் ஈடுபட்டு 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீஸ் நேரடியாக கல்லூரிக்குச் சென்று ரயில்களில் ரூட் தல பிரச்சனையில் ஈடுபடும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். ஆனாலும், பிரச்சனை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த ரூட் தல மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 15 பேர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரைக் கல்லூரி நிர்வாகம் சஸ்பண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருந்ததது.
இந்த நிலையில், தொடர்ந்து ரயில் நிலையங்களில் மோதல் சம்பவம் நடைபெறக் காரணமான மாநிலக் கல்லூரி மாணவர்கள் 30 பேரைக் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க ரயில்வே போலீஸ் மாநிலக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.