Skip to main content

ஆவின் நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள்: சகாயம் தலைமையில் விசாரணை நடத்த கோரிக்கை

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
aavin



ஆவின் நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கூறியுள்ளது. 
 

இச்சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது, 
 

கோவை மாவட்ட "ஆவின்" நிறுவனத்தில் கடந்த 2017 - 18ம் ஆண்டுக்கான "வரவு - செலவு கணக்குகள் தணிக்கை" நடைபெற்ற போது அதில் "ஒப்பந்தம் நீட்டிப்பு, நிர்வாக குளறுபடி, உணவுப் பொருட்கள் பராமரிப்பு குறைபாடு"  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆவின் நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள தகவலை தணிக்கை குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக தற்போது ஊடகங்களில் செய்தி வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது.
 

அதுமட்டுமின்றி கோவை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு வாங்கப்பட்ட பல இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்த நிலையில் இருப்பதும், குறைந்த விலையுள்ள பல இயந்திரங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன் காரணமாகவும் தமிழக அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

மேலும் கோவை மாவட்ட ஆவின் ஒன்றியத்தின் கீழ் இயங்கும் 19 பால் குளிரூட்டும் நிலையங்களில், 9 நிலையங்கள் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றியும், 10 நிலையங்கள் எடை உரிமம் பெறாமலும் இயங்குவதாக தணிக்கை குழு அறிக்கை தெரிவிக்கிறது. தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நிலையில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலையங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் எடை உரிமம் பெறாமல் இயங்கி வருவது அதிர்ச்சியளிக்கிறது.

 

 

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்பான ஆவின் நிறுவனத்தில் கோவை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகளைப் போல தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்" என்கிற பழமொழியைப் போல் கோவை மாவட்டத்தின் ஆவின் முறைகேடுகள் அமைந்துள்ளன.


 

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணைகளிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து அவற்றை களையவும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சகாயம் போன்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக முதல்வர் அவர்களை "தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்" சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

ஆவின் மாதாந்திர பால் அட்டையில் மாற்றம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
A change in the monthly milk card

ஆவின் மாதாந்திர பால் அட்டையை எளிய நடைமுறையில் காகிதமில்லா முறையில் அறிமுகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தற்போது காகிதமில்லா பால் www.aavin.tn.gov.in இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாகவும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்பொழுது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தியைக் கொண்டு நுகர்வோர்கள் ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காகித பால் அட்டையையும் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முனிசிபல் சாலை, அந்தோனியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஹவுசிங் போர்டு காலனி, பெரிசன் காம்ப்ளக்ஸ் சாலை, டீச்சர்ஸ் காலனி, 3வது மைல் பாலம் அருகில், தமிழ்ச் சாலை, 3வது மைல் பாலகம், ஸ்டேட் பாங்க் காலனி, கோபாலராயபுரம், சாயர்புரம், கருங்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி ஆவின் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.