![Let us stand for loot Minister Udayanidhi Stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/f-oMH_eKcD4RDPIez_EW4Vdaz3sCeh5guIctJyVrhV4/1694254359/sites/default/files/inline-images/udhay--hand-file_1.jpg)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சனாதன ஒழிப்பு குறித்துப் பேசுகையில், “திமுக என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்க தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சியைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. கொள்கைக்காக நிற்போம்” எனத் தெரிவித்தார். முன்னதாக இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு, “9 வருசத்துக்கு முன் மோடி சொன்னாருல்ல இந்தியாவையே மாத்திக் காட்டுகிறேன்னு. மாத்திட்டாருல்ல. சொன்னதை செஞ்சிட்டாரு. வாழ்த்துகள். என்னை தொட்டால் 10 கோடி தருவதாக சொல்லியுள்ளனர், எனக்கு டிமான்ட் அதிகமாகி கொண்டே செல்கிறது. சனாதனம் குறித்து அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பேசாததையா நான் பேசிவிட்டேன். பொய் செய்தி பரப்புவதே பாஜகவின் முழு நேர வேலை. அதிமுக என்ற கட்சியின் பெயரில் அண்ணாவின் பெயர் உள்ளது. அண்ணாவையும், அம்பேத்கரையும் விட சனாதனத்தை எதிர்த்து பேசியது யாருமில்லை. சனாதனத்தை எதிர்த்து அறிஞர் அண்ணா அதிகமாக பேசி இருக்கிறார். சனாதனம் குறித்து அதிமுகவின் கருத்தை மட்டுமே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.