Skip to main content

'கஜா' கற்றுக்கொடுத்த பாடம் - ஒரு வருடத்தில் 31 நீர்நிலைகளைச் சீரமைத்த இளைஞர்கள்!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

 

'கஜா புயல்' டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டபோது விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துகிடந்த போது, இத்தனை வருட உழைப்பும் ஒரு சில மணி நேரத்தில் சாய்ந்துபோனதே என்று கண்கலங்கி நின்ற விவசாயிகள், இனி இப்படி மரங்களை வளர்க்க தண்ணீருக்கு எங்கே போவோம் எனக் கண்ணீர் விட்டனர்.

 

தண்ணீரைச் சேமிக்கும் ஏரி, குளம், குட்டைகளும் மராமத்து செய்யப்படவில்லை. நிலத்தடி நீரும் அதலபாதாளத்திற்குப் போய்விட்டது எனச் சோகத்தில் மூழ்கியிருந்த நேரத்தில், தென்னையால் படித்து வெளிநாடு, வெளியூர்களில் சம்பாதித்துவந்த இளைஞர்கள் இணைந்து 'கஃபா' என்ற அமைப்பைத் தொடங்கி, நீர்நிலைகளை மராமத்துச் செய்யத் தொடங்கினார்கள். 2019 -ல் தொடங்கிய சீரமைப்புப் பணிக்கு நற்பலன் கிடைத்ததால், அடுத்தடுத்து அந்தப் பணியைச் செய்துவருகிறார்கள். 2020 ஆண்டில் மட்டும் 31 நீர்நிலைகளைச் சீரமைத்துத் தண்ணீரைத் தேக்கிச் சாதித்திருக்கிறார்கள், கைஃபா இளைஞர்கள். இதுகுறித்து, கைஃபா இளைஞர்கள் கூறும்போது,



சென்ற (2019) ஆண்டு, நாங்கள் 25 இடங்களில் நீர்நிலைகள் மற்றும் வரத்து வாரிகள் சீரமைக்கும் வேலைகளைச் செய்திருந்தோம். அதன்  தொடர்ச்சியாக இந்த 2020 ஆண்டும் அந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்தோம். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் அனைத்தையும் முடக்கினாலும், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக இடங்களில் சீரமைக்கும் வேலைகளைச் செய்து முடித்தோம்.
 

அந்த இடங்கள் பின் வருமாறு:

 

1. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கல்யாணஓடை வரகன் ஏரி - வரத்து வாய்க்கால்.


2. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், முன்னாவல் கோட்டை முடவன் ஏரி வரத்து வாரி.


3. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் வண்ணான் குளம்.


4. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், பேராவூரணி வடபாதி வாய்க்கால்.


5. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கள்ளப் பெரம்பூர், செங்கழு நீர் ஏரி. (குடிமராமத்துப் பணிகள்)


6. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், பிரதாபராமபுரம் பழைய சந்திர நதி வாய்க்கால்.
 

cnc

 

7. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவாவிடுதி தெற்கு வடக்கு வடிகால் வாய்க்கால்.


8. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆதி திராவிடர் குளம், வரத்து வாரி.


9. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், சொர்ணக்காடு கொப்பி முனி வாய்க்கால்.


10. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்படினம் சாலை குளம்.


11. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், லக்ஷ்மி நரசிம்மபுரம் வெட்டுக் குளம்.


12. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் பூவற்றக்குடி செல்ல ஊரணி.


13. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி, பெரிய குலத்திற்குச் செல்லும் வரத்து வாரிகள் (2)


14. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு ராஜாளி ஏரி ( குடி மராமத்து)


15.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், களத்தூர் காடுவா ஏரியின் வரத்து வாரி.


16. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், புதுப்பட்டினம் வாய்க்கால்.


17. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், தென்னங்குடி பெரிய குலத்திற்கு செல்லும் வரத்து வாய்க்கால்கள் (3)


18. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தமங்கலம் வரத்து வாரிகள்


19. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பை பரம்பாடி குளம் வரத்து வாரிகள் (3)


20. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பட்டிப்புஞ்சை வெட்டு குளம்.


21. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், மரக்காவலசை கழுமங்குடா மையத்தான் குளம்.


22. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், துறையூர் பிள்ளையார் குளம்.


23. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், பின்னவாசல் பிக்சுண்டு குளம்.


24. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர் பெரிய ஏரி.


25. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம்,  மருங்கப்பள்ளம் காட்டுக் குளம்.


26. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், மருங்கப்பாள்ளம் கைலான் குளம்.


27. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தாமிரங்கோட்டை கொழுங்கசெரி.


28. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மனோரா பிள்ளையார் குளம்.


29.தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், சொர்ணக்காடு ஆதி திராவிடர் குளம்.


30. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி வண்ணான் குட்டை.


31. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மனோரா கடலுக்கு அருகே சதுப்பு நிலக்காடுகள் உருவாக்க கரைகள் அமைக்கப்பட்டது.
 

காவேரி டெல்டாவில் 4 மாவட்டங்கள், 8 வட்டங்கள், மொத்தம் 31 நீர்நிலைகள் எனச் சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக இடங்களில் வேலைகள் நடந்தது. காவிரி நீர் மற்றும் பருவ மழையினால் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிறைந்து காட்சி அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இதையல்லாமல் பல இடங்களில் மரக் கன்றுகள், பனை விதைகள், குறுங்காடுகள், மழை நீர் சேகரிப்புத் திட்டங்கள் எனப் பல செயல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
 

nkn


இந்தத் தருணத்தில் எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்த அனைத்து ஊர் மக்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், இந்த முயற்சியினை மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கும், பொருளாதார உதவிசெய்த முகம் தெரிந்த, தெரியாத அனைத்து நல்லுங்களுக்கும், மில்ஆப் தொண்டு நிறுவனத்திற்கும், எங்கள் வேலைகளின் செலவைக் குறைக்க பெரும் உதவியாய் வாகன உதவிசெய்த மில்மிஸ்ட் ஃபுட் ப்ரொடெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், பி.டபிள்யூ.டி அதிகாரிகளுக்கும், எங்களது செயல்களைப் பல இடங்களுக்குக் கொண்டு சென்ற ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைதள நண்பர்களுக்கும், ஜெ.சி.பி, ஹிட்டாச், ட்ராக்ட்ர் போன்ற வாகன ஓட்டுநர்களுக்கும், கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


இதேபோல 2021 ம் ஆண்டும் இதை விட பல மடங்கு ஆக்கத்துடன், மேலும் பல இடங்களில் நீர்நிலைகளை மீட்டு, சீரமைத்து, தண்ணீரை நிரப்புவோம். அதேபோல, அடுத்த 5 ஆண்டிற்குள், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் மீட்கப்படும், தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் அவலம் முடியும், தண்ணீர்ப் பஞ்சம் காணாமல் போகும், முப்போகமும் விவசாயம் நடக்கும்! என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.