நேற்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக பேரவை கூடி இருக்கிறது. இந்த இரண்டாவது நாள் கூட்டத்தில் ஏழு சட்ட மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.
மதுபானங்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படும் ஸ்பிரிட்டிற்கான வரியை உயர்த்தும் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சர்க்கரை ஆலையில் இருந்து கிடைக்கக்கூடிய ஸ்பிரிட்டை, தமிழ்நாடு முழுவதும் மதுபானம் தயாரிக்கும் ஆலைகளுக்கு தேவைப்படும் சாதாரண, நடுத்தர மற்றும் பிரீமியம் வகை ஸ்பிரெட்டுகளுக்கான வரி உயர்த்தப்படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது.
அதேபோல் சீட்டு நிறுவனங்களுக்கான நிதி திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்ய இருக்கிறார். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு நடத்தப்படும் சீட்டு நிறுவனங்களை முறைப்படுத்தாமல் இருப்பதாகவும், இதனால் சீட்டு மோசடி போன்ற பல்வேறு முறைகேடுகள் குறித்த புகார்களை விசாரிப்பது குறித்த சட்ட மசோதாவை பத்திரப்பதிவுத்துறை கொண்டுவர இருக்கிறது. தனியார் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கொண்டு வர இருக்கிறார். இதுபோன்ற ஏழு மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதிமுக சார்பில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாகவும், டெங்கு பரவல், சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.