நக்கீரன் அலுவலக முகவரிக்கு பெண் ஒருவரின் பெயரில், தலைநகரின் முக்கியப் பகுதியில் இருந்து ஒரு கொரியர் வந்தது. பிரித்து பார்த்த நமக்கு, அந்தக் கடிதம் இதயத் துடிப்பை அதிகரித்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு பெண் டிரைவும் இணைக்கப்பட்டிருந்தது. அதை சிஸ்டமில் போட்டுப் பார்த்தபோது, கடவுளாக மதிக்கும் மருத்துவர் ஒருவரின் செயல், நம்மை ஆட்டம்காண வைத்தது. அதுவும், மருத்துவமனைக்குள்ளே நடந்த அந்தச் சம்பவம் நம்மை நிலைகுலையச் செய்தது.
அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பின்வருமாறு, இந்த பெண்ட்ரைவில், டாக்டர் சுப்பையா ஷண்முகம் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் செவிலியர் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், பாலியல் செயலில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தச் செயலை அம்பலப்படுத்துவதன் நோக்கம் சுப்பையாவின் தொடர்ச்சியான பொருத்தமற்ற நடத்தையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் சுப்பையா மீது விசாகா கமிட்டியின் உத்தரவுக்கு பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விசாகா கமிட்டியின் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய புற்றுநோய் மருத்துவமனைக்கு சுப்பையா சண்முகத்தை இடமாற்றம் செய்து விட்டோம். இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு விசாகா கமிட்டியின் உத்தரவு வரும். வந்தவுடன் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.