![latest report bear has rabies](http://image.nakkheeran.in/cdn/farfuture/vNuvlE-zWxa5g0uoUQc8dHdZRsKBV6vntcqQcdbWKE4/1668172236/sites/default/files/inline-images/997_26.jpg)
தென்காசி மாவட்டத்தின் கடையம் அருகேயுள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்திற்குக் கடந்த 6ம் தேதியன்று பைக்கில் சென்ற மசாலா வியாபாரி வைகுண்டமணியை வனப்பகுதியிலிருந்து வந்த 8 வயது பெண் கரடி ஒன்று வழிமறித்துக் கடித்துக் குதறியது. இதைத் தடுக்கச் சென்ற பொதுமக்களையும் கரடி ஆவேசமாக விரட்டியதில் சைலப்பன், மற்றும் நாகேந்திரன் இருவரையும் கடித்துக் குதறியிருக்கிறது.
படுகாயமடைந்த மூன்று பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் கிசிச்சையிலிருக்கின்றனர். இதனிடையே வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் கரடியைப் பிடிப்பதற்காகத் தீவிரமாகத் தேடினர். ஆனால் கரடி ஆக்ரோஷமாக இருந்ததால் பிடிக்க முயற்சிக்கும் போது தாக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பின் பொருட்டு கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர் அர்னால்ட் உள்ளிட்டோர் 15 அடி தொலைவிலிருந்து 2 மயக்க ஊசி செலுத்தி கரடியைப் பிடித்தனர். பின்னர் கரடி களக்காடு செங்கல்தேரி அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.
இதனிடையே பிடிபட்ட கரடி திடீரென்று இறந்தது. மயக்க மருத்து பாதிப்பினால் கரடி இறந்திருக்கலாம் என்றும் அல்லது நுரையீரல் பாதிப்பா என்று வனத்துறையினர் சந்தேகப்பட்டனர். பின்னர் இறந்த கரடியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பின்பு தலையணையில் எரிக்கப்பட்டது.
கரடியின் பிரேதப் பரிசோதனையின் தன்மை பற்றி நாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியாவிடம் கேட்டதற்கு, “கரடிக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு மற்றும் ரேபிஸ் எனப்படும் வெறி நோய் பாதிப்பும் இருந்திருக்கிறது. என்பது தெரிய வந்துள்ளது. கரடி வனத்தை விட்டு வெளியே வரும்போது நாய் கடித்திருக்கலாம். அதனால்தான் ஆக்ரோஷத்துடன் கரடி மனிதர்களைத் தாக்கியுள்ளது. இந்த விபரத்தை சிகிச்சையிலிருக்கிறவர்களின் மருத்துவமனை மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது” என்றார். இந்நிலையில் கரடிக்கு ரேபிஸ் வெறிநோய் பாதிப்பு விவகாரம் பரபரப்பாகியிருக்கிறது.