சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் தயாரிப்பாளரும், சொற்பொழிவாளரும், எழுத்தாளரும், கவிஞருமான கலைமாமணி முனைவர் பாலரமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சி, நாளை (25.11.2021) மாலை 5 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடக்க இருக்கிறது. பாலரமணி, பிரபல தமிழ்க்கவிஞர் ஆண்டாள் பிரியதார்ஷினியின் துணைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 19ஆம் தேதி நடக்கவிருந்த இந்த நிகழ்ச்சி, மழை காரணமாக 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில், வி.ஜி.பி குழுமத் தலைவர் வி.ஜி. சந்தோஷம் முன்னிலையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், ஊடகவியலாளர் மை.பா. நாராயணன், பேராசிரியர் உலகநாயகி பழனி, கவிஞர் இளம்பிறை ஆகியோர் நினைவுரை ஆற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் முனைவர் பாலரமணி எழுதி, அவரது துணைவியார் ஆண்டாள் பிரியதர்ஷினி தொகுத்த, ‘தமிழ் இலக்கியத்தின் வரலாறு’ என்னும் நூல் வெளியீடும் நடக்கிறது.
அதேபோல், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி தொகுத்த ‘என் இனிய பாலா’ என்னும் நினைவஞ்சலி தொகுப்பும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. பல்துறை சார்ந்த பெருமக்கள் இதனைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆண்டாள் பிரியதர்ஷினி ஏற்புரை நிகழ்த்துகிறார். நிகழ்ச்சியை ‘ழகரம் வெளியீடு’ ஏற்பாடு செய்திருக்கிறது.