ஆன்லைன் விற்பனை தளமான OLX- ல் போலியான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை வெளியிட்டு மோசடி செய்த புகாரில் முன் பிணை வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
OLX-ல் நிலம் விற்பனைக்கு உள்ளதாகக் கூறி ஸ்மார்ட் ஹோம் டெவலப்பர்ஸ் (Smart Home Developers) என்ற நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தை நம்பி கோவையைச் சேர்ந்த எல்ஸன் என்பவர் 11 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். பின்னர், எந்த ஆவணமும் இல்லாமல் நிலம் விற்பனை விளம்பரம் வெளியிடப்பட்டது தெரிய வந்ததால், கோவை மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், ஐந்து பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சந்திரன் என்பவர் முன் பிணைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஸ்மார்ட் ஹோம் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக 19 புகார்கள் வந்துள்ளதாகவும், மனுதாரர் ஒத்துழைக்காததால் விசாரணையை தொடர முடியவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனையேற்ற நீதிபதி, சந்திரனுக்கு முன் பிணை வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.