Skip to main content

“பெரியார் வாழ்க என முழக்கமிட்ட மண் இனி ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடும் நிலை வரும்...” - தொல்.திருமாவளவன்

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

"The land that chanted 'Long live Periyar' will now chant 'Jai Shri Ram'" - Thol Thirumavalavan

 

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது. காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி பேரணிகளை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக அனுமதி கோரப்பட்ட நிலையில், திருச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதநல்லிணக்க பேரணி என விசிக சார்பில் பேரணி நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் விசிகவின் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மதநல்லிணக்க பேரணி அனுமதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் காவல் துறை தலைமை இயக்குநரை சந்தித்து வலியுறுத்தினர். இதன் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

"The land that chanted 'Long live Periyar' will now chant 'Jai Shri Ram'" - Thol Thirumavalavan

 

அப்போது பேசிய அவர் “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடத்த அறிவிப்பு செய்திருந்தோம். அந்த அறிவிப்பை தொடர்ந்து மதிமுக உட்பட திமுக தோழமை கட்சிகள் அந்த பேரணியில் பங்கேற்பதாக அறிவிப்பு செய்திருந்தது. திராவிடர் கழகம் உட்பட சமூக நீதி இயக்கங்களும் அந்த பேரணியில் பங்கேற்பதாக அறிவிப்பு செய்திருந்தனர். திடுமென தமிழக காவல் துறை மனித சங்கிலிக்கும் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

 

ஆர்எஸ்எஸ் என்பது நாடறிந்த மதவாத இயக்கம். ஏற்கனவே பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்திருப்பதால் இஸ்லாமியர்கள் இடையே எதிர்ப்பு கண்டனங்கள் இருப்பதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்ற தமிழக காவல் துறையின் வாதம் ஏற்புடையது. அரசியல் இயக்கங்களாக ஜனநாயக அமைப்புகளாக இருக்கிற எங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது நியாயம் இல்லை. இதை காவல் துறையின் தலைமை இயக்குநரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம். 

 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக அபத்தமாக இருக்கிறது. 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அக்.2ம் தேதியை தேர்வு செய்திருக்கிறார்களாம். இரண்டாவது அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம் என்கிறார்கள். இதுவும் மிக அபத்தமானது.  அம்பேத்கரின் 130ஆவது பிறந்த நாள் விழா கூட கொண்டாடப்பட்டு விட்டது. மூன்றாவது அன்று விஜய தசமியை கொண்டாடப்போகிறோம் என்கிறார்கள். அக்.5 தான் விஜயதசமி வருகிறது. ஆக மூன்று காரணங்களும் பொருந்தாக் காரணங்கள். உள்நோக்கத்துடன் அந்த தேதியை தேர்வு செய்துள்ளனர். காந்தியடிகளை இழிவு செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் ஆர்எஸ்எஸ் களமிறங்கியுள்ளது. மேலும் இதை அமைப்புகளுக்கு இடையேயான சவாலாக பார்க்க வேண்டாம். இதை அரசுக்கும் ஆர்எஸ்எஸுக்கும் இடையேயான சவாலாக பார்க்க வேண்டும். 

 

இவ்வளவு நாள் சமூக நீதி வெல்க. பெரியார் வாழ்க என முழக்கமிட்ட இந்த மண்ணில் இனிமேல் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் என முழக்கமிடும் நிலையை அவர்கள் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்