கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ளது வைத்தியநாதசாமி - அசலாம்மாள் கோயில். இக்கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் கோயில் எதிரே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் குளித்து விட்டு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்குளத்தை சுற்றிலும் அழகாக செதுக்கப்பட்ட கருங்கற்க்கலான படிக்கட்டுகள், கரைகளில் நந்தி சிலைகள் கலை நயத்தோடு அமைக்கப்பட்டிருந்தன.
காலப்போக்கில் சிறுக சிறுக குளக்கரை மற்றும் குளம் ஆகியவைகள் ஆக்கிரமிக்கப்பட்டன. சில தனி நபர்களால் இப்போது குளம் கழிப்பறை குட்டையாக தேங்கி சுருங்கிவிட்டது. இந்த குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றகோரி பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என பல ஆண்டுகள் நீண்டது.
உயர் நீதிமன்றம் குளம் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லி தீர்ப்பளித்த பிறகும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக சமீபத்தில் திட்டக்குடி வட்டாட்சியர் பொறுப்பேற்ற சத்தியன் நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்ரமிப்பை அகற்ற முடிவெடுத்தார். ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் மூலமும் - நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடத்தியும் ஆக்கிமிப்பு பணிகளை முடுக்கிவிட்டார்.
விருத்தாசலம் உதவி கலெக்டர் சந்தோஷினிசந்திரா, இந்து அறநிலைய துறையின் உதவி ஆணையர்கள் ரேனுகாதேவி, ஜோதி, திட்டக்குடி தாசில்தார் சத்தியன் மற்றும் வருவாய்த்துறையினர் திருக்குளத்தை வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, திருக்குள கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் அகற்றும் பணி தொடங்கியது. இதில் வீடுகள், கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்காவும் அகற்றப்பட்டது.
இதன்படி 20ம் தேதி தாலுக்காவில் உள்ள அனைத்து கிராம அதிகாரிகள், பணியாளர்கள் என அனைவரையும் பாதுகாப்புக்கு வரவழைத்தார். 100க்கும் மேற்ப்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. காலை 10 மணியளவில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. 50 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளம் மீட்கும் பணியை காண சுற்றுப் பட்டு கிராம மக்கள் திரள் திரளாக வந்து பார்த்து சென்றனர். முனைப்புடன் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் சத்தியனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. நல்ல பணிகள் தொடரட்டும் என்கிறார்கள் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள்.